ஸ்ரீ ஸத்ய ஸாயி விரத பூஜை – பாகம் 4C

பகவானின் புனிதமான கதை

3வது அத்தியாயம் – ரக்ஷா காண்டம் (பகவானின் லோக ரக்ஷை)

Part 4C - picture 1

ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ ஸத்ய ஸாயி  விரத  கதை –  3வது அத்தியாயம் – ரக்ஷா காண்டம்:

பகவான் ஸத்ய ஸாயியின் லீலைகளும், மகிமைகளும் கணக்கில் அடங்காதது: விவரிக்க இயலாதது. அவரது கதை ஆழ்கடலை போன்றது; மிகவும் ரஞ்சகமானது. மானசீகமாக படித்தாலே பக்தர்களுக்கு சகல பாக்கியங்களும் கிட்டும். ஸ்ரீ ஸாயி பகவானின் கதை புனித சிந்தாமணி போன்றது. அவரது குணாதிசயங்களே முக்தி, ஞானம், வைராக்கியம் ஆகியவைகளை கொடுக்க கூடியது. அவர் மீது அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்களுக்கு வறுமை கடந்த காலம் போன்றது. பக்தர்கள் மன நிம்மதி அடைந்து, இக பர சுகங்களை பெறுவார்கள். ஸ்வாமி ஆழ்கடல் போன்று அன்புக் கொண்டு, பக்தர்களிடம் கருணையும், அக்கறையும் கொண்டவர். ஸாயி பகவானே பரப்ரஹ்மம் ஆனதால் பக்தர்கள் அறியாமல் செய்த பிழைகள் எல்லாவற்றையும் மன்னித்து அருள் செய்வார். ஒவ்வொரு பக்தனையும் ஆழ்ந்த அன்பு உள்ளவரா இல்லையா என்பதை சதா எடைப் போடுவார்; உலகத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க மனித ரூபமாக அவதாரம் எடுத்த பரப்ரஹ்மம்.

வண்டானது பூவில் உள்ள தேனையும், மகரந்தத்தையும் விட்டு அகலாதது போல் பக்தரும் அவரிடம் சரணாகதி அடைய வேண்டும். அவரது அருளால் நமக்கு சற்று அறிவு புலப்படும். அவரது பார்வையே பக்தர்களின் துயரங்களை (நீக்கக்கூடிய) அழிக்கக்கூடிய சக்தி கொண்டது. அவரது லட்சியமே துன்பப்படுபவர்களின் துன்பம் தீர்த்து அமைதியை தருவது ஆகும். அப்படி இருக்கும் போது சரணடைந்தவர்களை அவர் நிர்க்கதியாக விட்டு விடுவாரா?

ஒரு முறை, ஸாயி பக்தர் ஒருவருக்கு உடல் நிலை கவலைக்கிடமாகியது நோயாளியின் மருமகனே மருத்துவராக இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளித்தார். இருந்தாலும் ஜுரம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எல்லா விதமான கவனிப்பும் இருந்தும் அவரது உடல் நிலைமை கவலைக்கிடமாகி மோசமாகியது. மருத்துவர்கள் தன்னால் இயன்றவரை சிகிச்சை அளித்தும் பயன் இல்லை என கை விட்டனர். நோயாளியின் தாயார் மிகவும் மன வருத்தம் கொண்டார். மகனின் தலையணைக்கடியில் ஸ்வாமியின் உருவப்படத்தை வைத்து விட்டு, சிறிது சிறிதாக விபூதியைப் பிரசாதமாக நெற்றியில் இட்டு, வாயிலும் போட்டுக் கொண்டிருந்தார். தாயாருக்கு ஆறுதல் அளிப்பது  சற்று கடினமாக இருந்தது.

நாள் முழுவதும் அழுதுக் கொண்டே பகவானிடம் தன் மகனை காப்பாற்றும்படி வேண்டி கொண்டிருந்தார்; புத்திர பிக்ஷை கேட்டு கொண்டிருந்தார். நோயாளியின் உறவினர் மற்றும் அலுவலக நண்பர்கள் அவரை காண மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். எல்லோரும் நம்பிக்கை இழந்து விட்டனர். மருத்துவர்களும் இனி எந்த சிகிச்சையும் பயன்படாது என எண்ணி வேறு அறைக்கு அவரை மாற்றினர். நோயாளியின் அறைக்கு வெளியே தாயாரும், நண்பர்களும் கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.

சமயம் நடுநிசி பன்னிரண்டு மணியாக இருந்தது. தனிமையில் இருந்த நோயாளிக்கு ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவான் சொப்பன தரிசனம் அளித்தார். பகவான் நோயாளியிடம், “இன்றிலிருந்து நீ புதிய மனிதனாகப் போகிறாய்” என கூறி மறைந்தார். காலை பொழுது விடிந்தவுடன் நோய் மறைந்துவிட்டது; நோயின் அறிகுறிகளும் மறைந்து விட்டன. அவரை காண வந்த மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் ஆச்சரியம் அடைந்தனர். “இவ்வளவு சீக்கிரம் நோய் எவ்வாறு மறைந்தது? இது ஏதோ அற்புதம் நடந்து, தங்களை காப்பாற்றியது போல் தோன்றுகிறது” என கூறி நோயாளியை வேறு அறைக்கு முன் போல் மாற்றினார்கள். தாயார் கவலைத் தீர்ந்து ஆனந்தம் அடைந்தார். கடவுள் தன் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு புத்திர பிக்ஷை அளித்ததாக கருதினார். உற்றாரும், மற்றவரும் சந்தோஷம் அடைந்தனர்.

நோயாளி பூர்ண குணம் அடைந்தவுடன் பகவானுக்கு மரியாதை செலுத்த புட்டபர்த்திக்கு சென்றார். பரிபூர்ண அன்புக் கடலான ஸ்வாமி நோயாளியை தன் முன் அழைத்து, “நீ உண்மையில் இறந்து விட்டாய். உயிர் பிச்சை பெற்று என்னை இன்று காண வந்திருக்கின்றாய்” என கூறி ஆசி வழங்கி வழி அனுப்பினார். தக்க சமயத்தில் வந்து, காப்பாற்றி ஆசி வழங்கிய பகவானின் செயலை நினைத்து, தன் நன்றியை, மரியாதையை செலுத்திவிட்டு ஒரு சந்தோஷ பிறவியாக அந்த மனிதர் வீடு திரும்பினார். இந்நிகழ்ச்சியில் நோயாளியை தொடாமலே, எந்த வித பிரசாதமும் கொடுக்காமலே இறப்பிலிருந்து நோயாளியை பிழைக்க வைத்தார். இத்தகைய வல்லமை படைத்தது இந்த அவதாரத்தின் செயல்கள். எந்த நிமிடம், எந்த இடத்தில், எவருக்கு, எந்த வகையில் பகவான் அருள் செய்வார் என்பது வர்ணனைக்கு அப்பாற்பட்டது. இதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. தற்சமயம், ஸ்ரீ ஸத்ய ஸாயி அவதாரத்தில் நிகழ்த்தும் அற்புதங்கள் நம்ப சற்று கடினமானது. வேறு எந்த அவதாரங்களும் இத்தகைய அற்புதங்களை வெளிப்படுத்தியதில்லை. பக்தர்களுக்கோ, அவர்களின் உறவினர்களுக்கோ  எந்த பாகுபாடுமின்றி பகவான் தன் மகிமைகளையும், அன்பையும் பொழிகின்றார்.

கர்நாடகாவின் “கூர்க்” என்னும் பிரதேசத்தில் ஒரு ஜமீந்தார், ஸாயி பக்தராக  இருந்தார். அவரது பண்ணையில் ஓர் ஏழைப்பெண் வேலை செய்து வந்தாள். அவளது கணவரும், மாமியாரும் அப்பெண்ணை திட்டிக் கொடுமைப் படுத்தினர். இருவருக்கும் இடையில் அகப்பட்டு, துயரங்களைச் சொல்லி வருந்த ஆள் இல்லாமல், அவள் மிகவும் வேதனையுடன் நாட்களைக் கடத்தி வந்தாள். அவளுக்குப் பிறந்த குழந்தையும் இறந்ததனால், வேறு குழந்தை இல்லை என இதற்கும் மாமியார், இப்பெண்ணை பழி சுமத்தி கொடுமைப் படுத்தினார். கணவர் அந்த பெண்ணுக்கு எந்த ஆதரவும் கொடுக்காமல் தாயாரின் சார்பாகவே பேசி வந்தான். இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.

ஒரு நாள், அவள் கணவரும், மாமியாரும் பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்தார்கள். அவள் தேடிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருவருக்கும் வெளிப்படுத்தாமல் ரகசியமாக தன் கஷ்டங்களுக்கு தீர்வு காண முடிவுச் செய்தாள். காலை ஒன்பது மணிக்கு அவளுக்கு ஒரு கயிறு கிடைத்தது. உத்தரத்தில் கையிற்றை கட்டி, கழுத்தில் தூக்கு மாட்டி இறக்க முடிவு செய்தாள். திடீரென்று கழுத்து சுருக்கு அவிழ்ந்து அவளைக் காப்பாற்றியது. மறுமுறையும் ப்ரயத்தனம் செய்தாள். இம்முறை உத்தரத்தில் இருந்த கயிறு அவிழ்ந்து அப்பெண் கீழே விழுந்தாள்.  சுருக்கு கழுத்தில் அழுத்தியதால் காயம் அடைந்து ரத்தம் வரத் தொடங்கியது. அச்சமயத்தில் திடீரென அவள் ஒரு ஒளியையும் காட்சியையும் கண்டாள். மஞ்சள் நிற உடையுடன் ஸ்ரீ ஸாயி பகவான் புன்னகையுடன் அவள் முன் காட்சி அளித்தார். அவள் இதுவரை ஸாயியை கண்டதில்லை. ஆனால் ஜமீந்தார் வீட்டு பஜனையின் போது அவரது உருவப்படத்தை கண்டிருக்கிறாள். ஆதலால் தன் முன் காட்சி அளிப்பது ஸ்ரீ ஸாயி பகவான் எனப் புரிந்து கொண்டாள். அவர் கால்களில் பணிந்து அவள் தன் கஷ்டங்களை சில கணங்களுக்கு மறந்தாள். அந்த சமயம் அருகில் இருந்த வீட்டிலிருந்து ஒரு பெண்மணி அவள் வீடு நோக்கி வந்தாள்.

வீட்டுப் பெண்மணியின் கழுத்திலிருந்து ரத்தம் வருவதைக் கண்டு அவள் அதிர்ச்சியடைந்து, நடந்ததைப் பற்றி விசாரித்தாள். மறைக்க முடியாமல் அவள் நடந்தவற்றை கூறினாள். அதாவது தான் தூக்கில் தொங்க முயற்சி செய்த போது, பகவான் ஸாயி தன்னைக் காப்பாற்றி விட்டார் என கூறினாள். அவள் இவ்விஷயத்தை ஜமீன்தாரிடம் கூறினால், அவர் தன்னை வேலையை விட்டு நீக்கி, அவர்கள் குடும்பத்தையும் பண்ணையிலிருந்து வெளியேற்றி விடுவாரோ என பயந்தாள். அன்றிரவு ஸ்ரீ ஸாயி பகவான் ஜமீன்தாரின் மனைவி கனவில் தோன்றி, அவர்கள் பண்ணையில் வேலை செய்யும் பரிதாபமான பெண்ணை  தூக்கில் தொங்குவதிலிருந்து காப்பாற்றியதை கூறி, அந்த பெண்ணை சரியாக கவனிக்காமல் இருந்ததற்காக ஜமீன்தாரிணியை கடிந்து கொண்டார். தன் கணவரிடமும் மாமியாரிடனும் அவள் படும் துயரத்தைக் கூறி, அப்பெண் ஒரு துயர முடிவு எடுத்ததையும், அதிலிருந்து தான் அவளை மீட்டது பற்றியும் கூறினார். ஜமீந்தாரிணியின் கவனக் குறைவினால் தான் தலையிடும்படி ஆனது என்றார்.

கடவுளின் எச்சரிக்கை பெற்ற ஜமீந்தாரிணி அப்பெண்ணின் கணவரை அழைத்து, நடந்த விவரங்களை கூறி, எவ்வாறு பகவான் ஸாயி அவர் மனைவியைக் காப்பாற்றி மீட்டுக் கொடுத்தார் என்பதையும் கூறினாள். இவ்விஷயம் பண்ணை முழுவதும் பரவியது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, கருணையுள்ள ஸ்ரீ ஸாயி எவ்வாறு துயரங்களை தீர்க்கிறார் என எண்ணி எல்லோரும் கொண்டாடினர். அப்பெண்ணின் கணவரும், மாமியாரும், கடவுளே தன் மருமகளின் உயிரை காப்பாற்றியதால், இனி அவள் இறக்கக் கூடாது என எண்ணி அப்பெண்ணை அன்புடன் நடத்தி குடும்பத்தில் அமைதியைப் பெற்றனர்.

இந்த அவதாரத்தில் இது போன்று நடந்த நிகழ்ச்சிகள் கணக்கில்லாதவை. மற்றுமொரு நிகழ்ச்சிக்கு செல்வோம். ஒரு சுகாதார அதிகாரியின் மனைவி ஒரு முறை முடக்கு வாத நோயால் பல காலமாக அவதிப்பட்டு வந்தார். இடுப்புப் பகுதியில் தாக்கம் இருந்ததால், அவர் சரியாக எழுந்து நடக்க முடியாமல், அசைய முடியாமல் மிகவும் அவஸ்தைப் பட்டார். குழந்தைகளும் பல இருந்ததால், மிகவும் துயர நிலையில் இருந்தார். பல இடங்களில் பல விதமான சிகிச்சைகள் அளித்தும், பயன் எதுவும் இருக்கவில்லை. என்ன செய்வது என்று புரியாத கணவர் ஸ்ரீ ஸாயி பகவானின் தரிசனத்திற்காக புட்டபர்த்தி செல்ல எண்ணினார். ஸ்ரீ ஸாயி அவரைத் தன் முன் அழைத்து, “இந்த சின்ன விஷயத்திற்காக கவலைப்பட வேண்டாம்” என கூறி விரல்களினால் ”டக் டக்” என சொடக்கு இட்டு, அவரின் மனைவியை அது போல் குணப்படுத்துவதாக கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கணவர் சற்று நிம்மதி அடைந்து ஊர் திரும்பினார். ஸ்ரீ பகவானின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து காத்திருந்தார். நாட்கள் கடந்து செல்ல செல்ல, அக்கணவர் துயரமுற்றார். மூன்று மாதங்கள் இதுபோல் ஒரு விதமான பயனும் இல்லாமல் கடந்தன.

நம்பிக்கை ஊசலாட ஆரம்பித்தது. அவருக்கு வேலைக் காரணமாக ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. தன் மனைவியையும், குழந்தைகளையும், அத்துடன் அலுவலக வேலைகளையும் கவனிப்பது அவருக்கு சற்று கடினமாக இருந்தது. ஸ்ரீ ஸாயி பகவானின் அருளுக்காக அவர் காத்திருந்தார். வெளியூர் செல்ல சில ஏற்பாடுகளை செய்ய நினைத்து அவர் தன் அறைக்குச் சென்றார். அந்த சமயம் ஸ்ரீ ஸாயி பகவான் அவர் மனைவியிருந்த அறைக்குள் நுழைந்து, அவருக்கு காட்சி கொடுத்து, அவரை படுக்கையிலிருந்து எழுந்து நடந்து தன் பாதங்களில் பணியச் சொன்னார். விடியற்காலையில் ஸ்வாமியின் தரிசனம் கண்டு அப்பெண்மணி ஆனந்தமடைந்தார். தன் உடல் நிலையைப் பற்றி மறந்து, எழுந்து நின்றார். அச்சமயம் “டக் டக்” என விரல்களால் சொடக்கு இட்டது போன்ற சத்தம் கேட்டது. அப்பெண்மணி மிகவும் சந்தோஷம் அடைந்து, குனிந்து ஸ்வாமியின் பாதங்களில் பணிந்தார். எழுந்து சுற்றும் முற்றும் நோக்கிய போது, ஸ்வாமி அங்கு தென்படவில்லை; மறைந்திருந்தார். தன் உடல் சாதாரணமாக இருப்பதை எண்ணி வியப்புற்று, வெளியே செல்லும் தன் கணவருக்கு காப்பி கலந்துக் கொடுக்க சமையல் அறைக்கு வேகமாகச் சென்றார். தன் வேலைகளை முடித்த கணவர் மனைவியைக் காண அவரது அறைக்குச் சென்றார். அவர் படுக்கையில் இல்லை.  சமையல் அறையிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு அவர் அங்குச் சென்றார். அங்கு தன் மனைவி வழக்கம் போல் காரியம் செய்வதைக் கண்டு, விவரங்களைக் கேட்டார். மனைவி காலையில் நடந்த நிகழ்வுகளைக் கூறினார். ஸ்ரீ ஸாயி பகவான் தரிசனம் கொடுத்ததையும், “டக் டக்” என கேட்ட சத்தத்தையும், தான் ஸ்வாமியின் பாதங்களில் பணிந்ததையும் கூறினார். ஸாயியின் அருளால், வெகு நாட்களாக துன்புறுத்திய வியாதி கை விரல்களால் சொடக்கு இட்டது போன்று மறைந்ததை எண்ணி, இருவரும் சந்தோஷம் அடைந்து ஸ்வாமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

உலக மக்களை காக்கும் எண்ணத்துடன் அவதாரம் எடுத்த இந்த அன்புப்பெட்டகம் எந்த சமயத்தில் தலையிட்டு, யார் துன்பத்தை தீர்ப்பது என்பதை நன்கு அறிவார். எவர் துன்பம் தீர்வு அடைய வேண்டுமோ, அன்னாரின் கனவில் தோன்றி, அத்துன்பத்தை தீர்த்து வைப்பார். ஸ்வாமி முகமூடி நடனம் செய்யும் திறமை உள்ளவர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு, வேடம் ஏற்று நாடகம் நடத்துவார். பார்ப்பவர்களுக்கு ஸ்வாமிக்கு எதுவும் தெரியாது எனத் தோன்றும், ஆனால் அவர் மாயையிலிருந்து வெளிப்பட்டவர். அவர் மக்களை மாயையில் ஆழ்த்தி, வேடிக்கை பார்ப்பார். பொம்மலாட்ட நூல் போன்று,  கயிறுகளை இழுத்து, மக்களை பொம்மலாட்டத்தில் ஈடுபடுத்துவார். இதுவே அவரது லீலை. மாயையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பக்தர்கள் முயற்சி செய்ய வேண்டும். பக்தியுடன் ஸ்ரீ ஸாயி பகவானைப் பிரார்த்தித்து, அவரது புகழ் பாடி, த்யானத்தில் ஈடுபட வேண்டும். நற்செயல்களைச் செய்து, கடவுளின் அருளைப்பெற முயற்சி செய்ய வேண்டும். எங்கும் நிறைந்த ஸ்ரீ ஸாயியின் ஜோதி பரிபூர்ணமானது; உடைக்க முடியாதது; எங்கும் பரவி உள்ளது. அவருடைய ரக்ஷா காண்டம் (காப்பாற்றி ரக்ஷிப்பது) திசை காணாதது.

ஒரு சிறுவனை இறப்பிலிருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். ஒரு செல்வந்தருக்கு இரண்டடுக்கு மாடி கொண்ட ஒரு பங்களா இருந்தது. ஒரு நாள், தாய் குழந்தைகளை மொட்டை மாடியில் விளையாட விட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த மகனுக்கு நான்கு வயது. விளையாட்டு வேகத்தில் அச்சிறுவன் பின் நோக்கி ஓடி மொட்டை மாடியின் விளிம்பிற்கு வந்து, தவறி ஐம்பதடி கீழே பூமியில் விழுந்து விட்டான். சரியாக அதே தருணத்தில், ஸ்ரீ பகவான் அந்த சிறுவனை தன் கைகளில் ஏந்தி, கீழே புற்கள் நிறைந்த இடத்தில் கிடத்தி விட்டு மறைந்தார். இதற்கிடையில் தாயார் குழந்தையை காணாமல் தேட ஆரம்பித்தார். அவர்கள் வீட்டு வேலைக்காரன் குழந்தை கீழே விழுவதை பார்த்து விட்டு, குழந்தையை எடுத்துக் கொள்ள வேகமாக வெளியே வந்தார். தாயாரும், படி எறங்கி கீழே வந்து கொண்டிருந்தார். பரீட்சித்து பார்த்த போது குழந்தைக்கு காயம் எதுவும் படவில்லை; எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்தான். தாயார், வேலைக்காரன் இருவரும் ஆச்சரியம் அடைந்தனர். கவலைப்பட்ட தாயார் மறுபடியும் மகனை அடிப்பட்டது பற்றி விசாரித்தார். அதற்கு அந்த பையன், “நம் பாபா என்னை பிடித்து கீழே விட்டு விட்டு மறைந்து விட்டார்” என பதில் கூறினான்.

இதைக் கேட்ட வீட்டில் பெரியோர்களும், அருகில் உள்ளவர்களும் அதிசயப் பட்டனர். அவர்கள் ஸ்ரீ பாபா அடிக்கடி சொல்வதை நினைவுக் கொண்டனர். அதாவது, “நான் உங்கள் பின்னே இருப்பேன்; உங்களுடன் இருப்பேன்; உங்கள் கண் முன் வீட்டில் இருப்பேன். நான் உங்களை எப்பொழுதும் ரட்சிப்பேன்”. அவர்கள் ஒருவருக்கொருவர், “ஸ்ரீ பாபா தன் சத்தியத்தை காப்பாற்றுகிறார். நம் கண் முன்னேயே ஏதும் அறியா பாலகனை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். நாம் எல்லாம் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம்” என பேசிக் கொண்டனர். இவ்வாறு ஸ்ரீ ஸாயி ரட்சிக்கும் தன் திட்டத்தை இந்நிகழ்ச்சியில் காண்பித்து எல்லோரையும் புளகாங்கித படுத்தினார்.

மூன்றாவது அத்தியாயம் முற்று பெற்றது.

மறுபடியும் பூஜை செய்ய வேண்டும். ஒரு தேங்காயோ, பழமோ  நைவேத்யமாக படைத்து விட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். கதை தொடரும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-4-c-divine-story-of-the-lord-chapter-3-raksha-kaanda-swamis-protection-of-universe/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s