ஸ்ரீ சத்ய சாயி பாபா விரத பூஜை – பகுதி 4E

பகவானின் தெய்வீகமான கதை

அத்தியாயம் 5 – போத காண்டம் – பகவானின் உபநிஷதம்

Part 4E - Piture 1

சர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ சத்ய சாயி விரத கதை:

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அன்பும் இரக்கமும் கடலின் ஆழத்தைப் போன்றது. பரிபூர்ண அவதாரமான பாபா எல்லாவற்றிலும் நிறைந்துள்ளார். அன்னையும், தந்தையுமாய்த் திகழ்ந்து, ஆதியும், அந்தமும் இல்லாத பரப்ரஹ்மனின் ஸ்வரூபமாய் விளங்குகிறார். எல்லாம் அறிந்த பகவான் மூன்று குணங்களையும், ஆயகலைகள் அறுபத்தி நான்கையும் தன்னுள் அடக்கியுள்ளார். பகவானின் மகிமைகளை ஆயிரம் தலைகள்  கொண்ட(ஆதிசேஷன்) எண்ணற்ற சர்ப்பங்களால் கூட எடுத்துரைக்க முடியாது. கேட்கக் கேட்க தெவிட்டாத இன்பமாய் பகவானின் புனிதமான கதைகள் விளங்குகின்றன. அவரின் ஒவ்வொரு அசைவும் பார்ப்பவர்களின் மனதில் எண்ணற்ற மகிழ்ச்சியைத் தூண்டுகின்றன. சிவராத்திரி அன்று திரண்டிருக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கையில், தன் நாபிகமலத்திலிருந்து ஆத்ம லிங்கங்களை சிருஷ்டிப்பார். அவ்வாறு தோன்றிய லிங்கங்கள் வெவ்வேறு உருவங்கள் கொண்டன (சாலிக்ராமம், ஸ்படிக லிங்கம், ஜ்யோதிர் லிங்கம், ஸ்வர்ண லிங்கம்). பகவானின் இந்த திரு லீலைகள் வேறு எந்த ஒரு அவதாரத்திலும் இடம் பெறவில்லை. இந்த அவதாரத்தின் மகத்துவத்தை யாராலும் அளவிட முடியாது. அவரின் திருவாயிலிருந்து வரும் இனிமையான சொற்களைக் கேட்டு பல கோடி பக்தர்கள் தங்களையே மறந்து ஆனந்தத்தில் மூழ்கினர். பகவானின் ஒவ்வொரு அசைவும் உலகின் நலனுக்காகவே அமைந்துள்ளது. உயர்ந்த குறிகோள்கள் கொண்ட பல்வேறு கல்விக் கூடங்களை அவர் நிறுவினார். இக்கல்வி நிறுவனங்களில் ஆண், பெண் இரு பாலரும் தங்கள் மனம் போனபடி பழகுவதைக் காண முடியாது. இக்குழந்தைகள் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையுடனும், நல்ல பழக்க வழக்கங்களுடனும், கடவுளிடம் பக்தியுடனும் நடந்து கொள்வது பாரத நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கின்றது. இக்கல்வி கூடங்களில் பயிலும் மாணவ மாணவிகள் சத்யம், தர்மம், சாந்தி மற்றும் அன்பு போன்ற நற்குணங்களைக் கற்றுக் கொள்வதால், எதிர்காலத்தில் இச் சமுதாயத்திற்கு வழிக்காட்டியாகத் திகழ்ந்து, நல்ல பல மாறுதல்களை விளைவிக்கிறார்கள்.

பாபாவின் அருளுரையை இப்பொழுது நாம் கேட்கலாம்.

நீங்கள் அனைவரும் மனித நேயத்தின் தத்துவத்தை நன்கு புரிந்து அதற்கேற்றார் போல் வாழ்க்கையை வாழ வேண்டும். அனைவரும் இந்த உலகத்தின் ஆதாரமாக விளங்கி கொண்டிருக்கும் பரம்பொருளின் தன்மையை நன்கு உணர வேண்டும். விருப்பத்திர்கேற்றார் போல் வாழ்க்கையை வாழ்வது மனித தர்மம் ஆகாது. புராண இதிகாசங்களும், சாஸ்திரங்களும் மனிதன் வாழ்விற்கு ஏற்ற நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றன. இந்த தேகமும், தேகத்தை இயக்கும் சக்தியும் ஒரே பரம்பொருளின் அம்சம். இதே அம்சமானது பிரபஞ்ச சராச்சரத்தையும் வியாபித்துள்ளது. இந்த உண்மையை அறிந்து கொள்ள மனிதனுக்கு இடைவிடாத முயற்சி இன்றியமையாததாகும். மனிதனும் இறைவனும் ஒன்று என்னும் அனுபவத்தை மனிதனால் நிச்சியம் உணர முடியும். இந்த அனுபவத்தினால் வரும் ஆனந்தம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு விளங்குவதோடு மட்டுமல்லாமல், ஐம்புலன்களின் சக்திக்கு அப்பாற்பட்டும் விளங்குகிறது. இந்த உயர்ந்த பதவிக்குச் செல்வது ஒவ்வொரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையாகும்.

தன்னை சுற்றியுள்ளோர்களின் மனதில் புத்துணர்வையும் வீரத்தையும் தூண்ட மனிதனால் நிச்சியம் முடியும். ஒரு மனிதன் தன் மேல் வைத்திருக்கும் தன்னம்பிக்கை முக்கியம் என்று இந்த புண்ணிய பூமியான பாரதம் கற்பிக்கின்றது. ஆனால் இன்று நடைமுறையிலுள்ள கல்விமுறையானது இந்த மாபெரும் தத்துவத்திற்குப் பிரச்சனைகள் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கல்வி முறையை மாற்றி அமைப்பது உடனடியான தேவையாகும். நேர்வழியில் வாழ்க்கையை வாழ்வதே முக்கியமாக கருதும் மாற்று சிந்தனை, புதிய கல்வி முறையில் எதிரொலிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் வேலைகளில் ஈடுபடுவதே உயர்ந்த தர்மமாகும். அன்னை, தந்தை, குரு மற்றும் விருந்தாளிகள் ஆகிய அனைவரும் கடவுளின் அம்சங்கள் என்ற கருத்து மனதளவிலும், நடைமுறையிலும் போற்றப்பட வேண்டும். இதுவே ஒட்டுமொத்த சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கு உறுதுணையாக அமையும். கல்வி என்பது பிழைக்க மட்டுமே பயன்படும் கருவி ஆகாது. கல்வி என்பது வாழ்க்கையின் வேராகும். உலகியலை மட்டுமே கற்றுக் கொடுக்கும் கல்வி அமைதியை விளைவிக்காது. நவீன கலாசாரமானது மனிதனின் மனதைக் களங்கப்படுத்தி மூளையை வெறும் களிமண்ணாக மாற்றி விடுகின்றது. இதனால் மனிதன் தன் பாதை மாறி தீய பல காரியங்களில் ஈடுபட தூண்டப் படுகிறான். இன்று நடைமுறையிலுள்ள கல்வி ஒரு மாணவனின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக கருதப்படும். உடல்ரீதியான, மனரீதியான, ஆன்மீகரீதியான வளர்ச்சிக்கு வழி செய்வதில்லை. உடல்ரீதியான உலகியல் சுகங்களுக்கு மட்டுமே ஆசைப்பட்டு, மனிதன் தன் மகத்தான மனித நேயத்தை இழக்கிறான்.

ஆன்மீக வளர்ச்சியின் உச்சத்தை அடைய தேவையான வழிமுறைகளை வரையறுத்துள்ள ஒரே நாடு நம் புனிதமான பாரத நாடு. எனவே தான் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் ஆன்மீக பாதையில் நாட்டமும், முன்னேற்றம் அடைய தூண்டுதலும் இயற்கையாகவே அதிகம் இருக்கிறது. இந்த உலகியல் கல்வியானது எதற்கும் பயன்படாது. உங்களுக்கு இந்த உலகியல் அறிவும், தொழில்நுட்பமும் நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால் உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல் போய்விடுகின்றது. உதாரணத்திற்கு நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்றவைக்கு பதில் தெரியாமலே வாழ்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இந்த உண்மையை அறிந்து கொள்ள நாம் நம் வாழ்க்கையில் எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் இருப்பது அதை விட கேவலம். ஆத்ம விஸ்வாசம், தன்னம்பிக்கை, இதுவே வாழ்க்கையின் அடிவேராகும். பக்தியே இதன் பூக்களாகவும், ஆனந்தமே கனிகளாகவும், நல்ல நடத்தையே பழரசமாகவும் திகழ்கின்றன. இந்த உயர்ந்த சனாதன தர்மத்தையும், உங்களின் இன்றியமையாத மனித நேயத்தையும் பேணிக் காக்கும் பொறுப்பு உங்கள் அனைவரிடத்திலும் இருக்கின்றது.

இது போன்ற பொன்னான வார்த்தைகளின் மூலம் அங்கு கூடியிருந்த இளைஞர்களின் மனதில் தெளிவாக நல்ல விஷயங்களைப் புகுத்தினார் பாபா. இந்த அறிவுரைகள் மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கும் வழங்கினார். பகவானின் இந்த அன்பை அனைவரும் எந்த ஒரு பாகுபாடின்றி பெற்றனர். எல்லோரின் இதயத்திலும் இறை நம்பிக்கை என்னும் விதையை விதைத்து, ஆன்மீக தாகத்தை ஏற்படுத்தி, சேவை என்னும் ஆசையைத் தூண்டி, தன் அன்பை நீர்போல் ஊற்றி இந்த மரங்களை வளரச் செய்கிறார்.

பல்வேறு சங்கங்கள் மூலமும், மண்டலிகள் மூலமும் பகவான் தன் போதனைகளைக் கொண்டு செல்கிறார். தர்மத்தை நிலை நிறுத்தி, நல்ல பண்புகளை புகட்டுவதே  அவதாரத்தின் முக்கியமான குறிக்கோள். தன்னுடைய செயற்திட்டத்தை நிறைவேற்ற பகவான் மகாராஷ்டிர மாநிலத் தலை நகரமான மும்பையைத் தேர்வு செய்தார். அவ்விடத்திற்கு தர்மக்ஷேத்திரம் என்று பெயரிட்டார். பகவானின் நல்லாசியுடன் இந்த திவ்ய காரியத்தை பக்தர்கள் மேற்கொண்டனர். குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றன. இவ்வேகத்தை கண்டு அனைவரும் வியப்படைந்தனர். அந்தக் கட்டிடத்திற்கு சத்திய தீபம் என்று பகவான் பெயரிட்டார். இவ்விடத்தில் ஒரு தீபத்தின் புகைப்படம் உள்ளது. இந்த தீபமானது பல்வேறு சிந்தனைகளுடன் வரும் மனதை ஒரு நிலைப்படுத்தி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட உறுதுணையாய் திகழ்கிறது. அறியாமையிலிருந்து ஞானத்திற்கு செல்வதைக் குறிக்கின்றது.

மனிதர்கள் நிறைய துன்பங்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த சத்திய தீபமானது மன திடமும், சக்தியும் அளிக்கின்றது. இந்த பிரார்த்தனை மண்டபத்தின் பின் புறத்தில் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட படிகட்டுகள் இருக்கின்றன. நடுவில் காணப்படும் தூணானது பதினட்டு இதழ் கொண்ட தாமரை வடிவில் அமைந்துள்ளது. இது பகவானின் இருப்பிடம். இந்தத் திருக்கோவிலில் பகவான் தர்ம போதனை, தர்ம ஸ்தாபனம் மற்றும் தர்ம பிரதிஷ்டை ஆகிய மூன்று நற்செயல்களையும் நடத்தி வருகிறார். பாரத நாட்டிலுள்ள எண்ணற்ற பக்தர்கள் தங்கள் அன்பையும், நன்றிகளையும் பகவானின் திவ்ய பாத கமலங்களுக்கு சமர்ப்பணம் செய்ய இவ்விடத்திற்கு வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு தனி மனிதனும் ஆன்மீக சாதனையை தொடங்க வேண்டும். இந்த முயற்சியில் அயராது ஈடுப்பட்டால் தான் பலனானது கிட்டும். இறைவன் அனைத்து ஜீவ ராசிகளிலும் இருக்கின்றார். அதை நாம் உணர முயற்சி செய்தல் வேண்டும். ஒரு முறை பகவான் கூறியதாவது, “இந்த தர்மக்ஷேத்ரத்தின் மூலம் எனது போதனைகள் உலகெங்கும் பரவும்” என்றுதான். இந்த உலகத்தில் பார்க்கும் துயரத்திலிருந்து விடுதலை பெற மனிதன் மூன்று விஷயங்களை வளர்த்து கொள்ள வேண்டும். அவை இடைவிடாத கடவுள் சிந்தனை, காரியத்தின் பலனை அவரிடம் சமர்ப்பித்தல் மற்றும் அனைத்து சந்தர்ப்ப சூழ்நிலையிலும் அவரிடம் நம்பிக்கை செலுத்துவது. இவ்வாறாக பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதே மனிதனின் குறிக்கோளாக அமைய வேண்டும். ஆனால், மனிதன் உலகியல் சம்பந்தமான சுகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறான். தர்மத்தை விளைவிக்கும் நிலமாக ஒருவரின் இதயம் திகழ்கிறது. எனவே தான் நம் இதயத்தை தர்மக்ஷேத்ரம் என்றும் குருக்ஷேத்ரம் என்றும் அழைக்கின்றோம். எனவே ஒவ்வொருவரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடிப்பது. இதைத் தவிர்த்து, தீய வேலைகளில் ஈடுபட்டு இந்த மகத்தான வாய்ப்பை வீணடிப்பது பலவீனம். இதுவே பகவத் கீதையின் சாராம்சமாகும். பகவத் கீதையின் முதல் ஸ்லோகத்தில், “இந்த தர்மேக்ஷத்ரமாகிய குருக்ஷேத்ரத்தில் என் மக்களும், பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்வியை திருதுராஷ்டிரன் எழுப்பினார். மேலே  கூறப்பட்டுள்ள “என் மக்கள்”  என்ற பதமானது அஹங்காரத்தையும், கர்வத்தையும் குறிக்கின்றது. இதுவே ராஜச, தாமச குணங்களின் சேர்க்கை. “பாண்டவர்கள்” என்ற பதமானது தூய்மையைக் குறிக்கின்றது. இது சத்வ குணத்தை எடுத்துரைக்கிறது. நம் வாழ்க்கையில் இந்த ஸத்வ,  ராஜச, தாமச குணங்களிடையே இடைவிடாது போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இறுதியில் வெற்றி ஸத்வ குணத்திற்கே கிட்டும். ஒரு நதியானது கடலிலிருந்து பிறக்கிறது. இடையில் எத்தனை தடைகள் வந்தாலும் இறுதியில் நதி கடலை சென்றடைகின்றது. இதைப் போல், மனிதனும் தன் பிறப்பிடமான ஆத்மாவை நோக்கியே பயணிக்க வேண்டும். இந்தத் தூய்மையான ஸத்வ குணத்தைப் போற்றி காப்போருக்கு இறைவனின் அருளானது கிட்டும்.”

பக்தர்கள் தங்கும் விடுதி, பிரார்த்தனை மண்டபம், பஜனை மண்டபம், அச்சகம் போன்றவை இந்த தர்மக்ஷேத்ரத்தில் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. அவர்கள் பகவானின் போதனையை நன்கு கவனித்து, ஆன்மீக வளர்ச்சியில் அதிக முயற்சி செலுத்துகின்றனர். எனவே இவர்களை நன்கு உபசரித்து வசதிகள் செய்து வர சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் நடைபெறும் பஜனைகளைத் தவிர, அனைத்து முக்கிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இந்தப் புனிதக் க்ஷேத்ரத்தை ஆரம்பித்த பொழுது பகவான் தன் திருக் கரங்களால் அணையா தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த தீபமானது அனைத்து மனித குலத்திற்கும் வழிக்காட்டியாக திகழ்கின்றது. இந்த விளக்கிலிருந்து பல பக்தர்கள் தங்கள் விளக்குகளை ஏற்றி, தங்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்வது வழக்கம். பகவான் பரிந்துரைத்துள்ள ஜோதி தியானம் செய்யும் கூடங்களில் இந்த விளக்குகள் மிகவும் பலன் தருகின்றன. இதற்கான முழு அனுமதியை பகவானே வழங்கினார். ஒவ்வொரு பக்தரின் இதயமும் தர்மக்ஷேத்ரமாக, பிரசாந்தி நிலையமாக, சனாதன தர்மத்தின் ஆணிவேராக அமைய பகவான் தன் அருளாசி வழங்கினார். மதங்களுக்கு அப்பாற்பட்ட வேதங்களைப் பேணிக் காக்க வேண்டும் என்பதில் பகவான் உறுதியாக இருந்தார்.

ஆதியும் அந்தமும் இல்லா பரம்பொருளே நம் பகவான். அவரின் சக்தி வரையறைக்கு அப்பாற்பட்டது அவரின் மகிமைகளும், லீலைகளும். “அணுவை விடச் சிறியதாக, அண்டத்தை விடப் பெரியதாக” விளங்குபவரே நம் பகவான். அவரின் மகத்துவம் இந்த சராசரத்தையும் தாண்டிச் செல்லக் கூடியது. முழு நம்பிக்கை, அன்பு மற்றும் பக்தி ஆகிய மூன்று குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைப் படி, பக்தர்கள் இந்த சத்யா சாயி விரதத்தைக் கடைப்பிடித்தால் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அனைத்து பக்தர்களும் ஒன்று கூடி பகவான் பெருமைப்படும் அளவிற்கு நற்காரியங்களைச் செய்து அன்பையும் ஞானத்தையும் பெற நான் பிரார்த்திக்கிறேன்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-4e-divine-story-of-the-lord-chapter-5-bodha-kaanda-swamis-universal-teachings/

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s