பக்தர்கள் ஏன் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும் – அதன் முக்கியத்துவம்:
விரதம் என்றால் ஒரு புனிதமான சடங்குமுறை. கல்பம் என்றால் பக்தர்கள் பூஜை செய்யும் போது, படிப்படியாக தொடர வேண்டிய சில குறிப்பிட்ட விதிமுறைகள். இரண்டுமே சமஸ்கிருத வார்த்தைகள் தான்.
பூஜை என்றாலே ஒப்புயர்வற்ற கடவுளுக்குத் தலை வணங்குதல் என்பதாகும். அவரைச் சென்று அடைவதுதான் எல்லா பக்தர்களுக்கும் விருப்பம். இந்த முயற்சியை நோக்கிச் செல்ல, அந்தக் காலத்தில் ஞானிகள் புனிதமான ஆனால் கடுமையான விதிமுறைகளை உருவாக்கினார்கள். அதைக் கடைப்பிடிக்க முடியாவிடில் சில எளிமையான விதிமுறைகளும் இருக்கின்றன. அதில் ஒன்று தான் விரதம்.
இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் சத்ய நாராயணப் பூஜையைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விரதம் செய்வதற்கு முக்கிய காரணமானது என்னவென்றால் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் கடவுள் பூர்த்தி செய்து வருவார் என்பதுதான் ஐதீகம்.
ஸ்ரீ சத்ய சாயி விரத கல்பம் என்ற பூஜையும் அதே மாதிரிதான். அவர் பிறந்த பொழுது சத்ய நாராயணா என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயருக்கு ஏற்ப, பக்தர்களை எல்லா சமயங்களிலும் காப்பார் என்பதுதான் அர்த்தம்.
பக்தர்களுக்கு சில விதிமுறைகள்:
- பூஜையை நடத்தத் தேர்ந்தெடுக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
- நான்கு ஓரங்களிலும், நடுவிலும், கோல மாவில் தாமரை வடிவங்கள் செய்ய வேண்டும்.
- மண்டபம் (மரத்தால் இயன்ற வரைச்சட்டம்) அமைக்க வேண்டும். மண்டபத்தின் நான்கு ஓரங்களிலும் வாழை மரம் கட்ட வேண்டும்.
- மண்டபத்தின் நடுவில் பூஜை செய்யும் இடத்தில் மரப்பலகை (பீடம்) ஒன்றை சுத்தமாக அலம்பி, துடைத்து வைக்க வேண்டும்.
- புதிய துணி ஒன்றை மடித்து பீடத்தின் மேல் வைக்க வேண்டும்.
- துணியின் மேல் ஐந்து ஆழாக்கு அரிசியைப் பரப்ப வேண்டும்.
- அரிசிக்கு நடுவில் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை விரலால் எழுத வேண்டும்.
- பூஜை மண்டபத்தின் பின்புறம், பூவும் பொட்டும் வைத்து அலங்கரித்த பகவானின் படம் ஒன்றை வைக்க வேண்டும்.
- உலோகத்தால் செய்த வட்டமான பாத்திரம் (ஒரு பெரிய குவளை) ஒன்றை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மஞ்சள் பொடியை நன்றாக குழைத்து பாத்திரத்தின் வெளிப்புறத்தில் தடவ வேண்டும். நான்கு திசைகளிலும் குங்கும பொட்டு இட வேண்டும். பாத்திரத்தில் பாதி அளவுக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும். அதில் ஐந்து துண்டுகள் பேரிச்சம் பழம், காய்ந்த திராட்சை, பாதாம், முந்திரிப்பருப்பு, மேலும் கற்கண்டு அதில் போட வேண்டும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, சந்தனம், அக்ஷதையும் பாத்திரத்தில் போட வேண்டும். ஐந்து வகைச் செடிகளின் இலைக்கொத்துகளைப் பாத்திரத்தில் அடுக்க வேண்டும். மாவிலை, ஆலிலை, அரச இலை, வில்வ இலை, பருத்தி இலையாக இருக்கலாம்.
- புதிய ரவிக்கைத் துண்டை மடித்து குழிவு வடிவத்தில் இலைக்கொத்துகளுக்கு நடுவில் வைக்க வேண்டும். குறுகிய பக்கம் பாத்திரத்திற்குள் இருக்க வேண்டும். அகன்ற பக்கம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
- குழிவு வடிவில் மடித்த ரவிக்கைத் துண்டை சுற்றி பூச்சரம் வைக்க வேண்டும்.
- குடுமியுடன் உள்ள ஒரு உரித்த தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். குடுமியைச் சுற்றி ஒரு பூச்சரமும், பாத்திரத்தின் விளிம்பை சுற்றி ஒரு பூமாலையும் வைக்க வேண்டும். அலங்கரித்த தேங்காயை கோணம் போல் மடித்திருக்கும் ரவிக்கைத் துண்டுக்குள் வைக்க வேண்டும்.
- அலங்காரத்திற்கு பிறகு, பாத்திரம் தெய்வத்தின் உடம்பு மாதிரியும், தேங்காய் தெய்வத்தின் தலை மாதிரியும், ரவிக்கைத் துண்டு மேல் வஸ்த்ரம் போலும், பொட்டு, மஞ்சள், மாலைகள் எல்லாம் ஒரு அழகான அலங்காரம் போல் இருக்கும்.
- இது தான் கலசம். அழகான கலசத்தைப் பீடத்திற்கு மேல், ஸாயின் படத்திற்கு முன் வைக்க வேண்டும்.
- பரப்பிய அரிசிக்கு நடுவில் எழுதியிருக்கும் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு மேல் பெரிய வெற்றிலையை வைத்து அதற்கு மேல் பாபாவின் விக்ரஹத்தை வைக்க வேண்டும். அதற்கு முன் பக்கம், ஒரு வெற்றிலையை வைத்து, அதற்கு மேல் மஞ்சளைத் தண்ணீரில் குழைத்த கணபதி உருவம் பண்ணி வைக்க வேண்டும்.
- விரதத்தை ஆரம்பிக்கும் போது, கணபதியை முதலில் வழிபட வேண்டும். அதற்குப் பிறகு தான் பகவான் பாபாவையும் கலசத்திற்கும் பூஜை செய்ய வேண்டும்.
பூஜைக்கு வேண்டிய சாமான்கள்
- தேங்காய் (8)
- வாழைப்பழம் (8)
- பல வகை பூக்கள்
- பச்சை இலைகள் (வில்வ இலை, துளசி, ஆலிலை, மாவிலை, அரச இலை)
- மஞ்சள் பொடி
- குங்குமம்
- சந்தனம்
- அக்ஷதை
- பூணல்
- வஸ்த்ரம்
- கற்பூரம்
- ஊதுவத்தி
- ஐந்துத் திரிகள் போடுகிற மாதிரி ஒரு விளக்கு
- அதிக திரிகள் (அவசரத்திற்கு)
- வெற்றிலை
- பாக்கு
- பஞ்சாம்ருதம் (பால், தயிர், நெய், தேன், சர்க்கரை அல்லது வெல்லம்)
- வெண்கல மணி (பூஜை ஆரம்பிக்கும் பொழுது)
- எட்டு தேங்காய் இல்லையென்றால் இரண்டு போதுமானது. ஒன்று பூஜை ஆரம்பிக்கும் பொழுது, ஒன்று கடைசியில் வேண்டும். பூஜைக்கு நடுவில் ஒரு பழம் கூட சமர்ப்பிக்கலாம். பூஜை முடிந்த பின் பிரசாதம் கொடுக்க வேண்டும். அலங்காரம் எளிதாகவும் பண்ணலாம். பூஜை பண்ணுகின்றவரின் மனதிற்கு ஏற்ப பண்ணலாம். திடநம்பிக்கையுடனும், பக்தியுடனும் சமர்ப்பிக்க வேண்டும்.
ப்ரஸாதத்தில் இருக்க வேண்டிய பொருட்கள்
- கோதுமை குருணை (ரவை அல்லது கோதுமை ரவை) – ஐந்து ஆழாக்கு
- சர்க்கரை
- காய்ந்த திராட்சை
- பாதாம், முந்திரி
- நெய்
ஏகாதசி அல்லது பௌர்ணமி அன்று விரதத்தை செய்யலாம்
மத்தியானம் வேளை பிரதோஷம் சமயம் அல்லது காலை பிரம்ம முஹுர்த்தம் சமயம் விரதத்தை ஆரம்பிக்கலாம்.
கோயில் அல்லது புனிதமான இடத்தில் செய்யலாம். ஆற்றங்கரை அல்லது துளசி செடி முன் அல்லது பக்தரின் வீட்டில் கூட செய்யலாம்.
குறிப்பு:
ஒவ்வொரு மனிதனும் இந்த பூஜையைச் செய்யலாம். கணவன் – மனைவி, கணவன் இல்லாதவர்கள், மனைவி இல்லாதவர்கள், வயதானவர்கள், கல்யாணம் ஆகாத பெண்கள், ஆண்கள் பூஜையைச் செய்து கடவுளின் அருளைப் பெறலாம்.
http://in.groups.yahoo.com/group/saidevotees_worldnet9/
பக்திதான் முக்கியம். சில சாமான்கள் இல்லையென்றால் ஆழ்ந்த பக்தியுடன் இருப்பதை வைத்துச் செய்யலாம். பாபாவிற்குத் தூய்மையான உள்ளம் தான் முக்கியம்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE : https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-puja-part-2-significance-preparation-and-items-required-for-the-prayers/